கோத்தாவுக்கு ஆதரவு – சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் கட்சியின் இந்த முடிவை அறிவித்தார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ள போதும், கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் பக்கம் சாராமல் செயற்பட முடிவு செய்துள்ளார் என, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

“தேர்தல் முடியும் வரை பதில் தலைவராக பேராசிரியர் றோகண லக்ஷ்மன் பியதாச பணியாற்றுவார்.

கோத்தாபய ராஜபக்சவின் முற்போக்கான கொள்கையின் அடிப்படையிலேயே அவரை ஆதரிக்க சுதந்திரக் கட்சி முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவை எடுத்திருப்பதால், நாங்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டதாக அர்த்தமில்லை. வரும் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்க மட்டுமே முடிவெடுத்துள்ளோம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்சவுடனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இரண்டு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெடுத்திடும்” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற பெயரில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடும் என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!