தமிழ்க் கட்சிகளை சந்திக்க ரணில் அழைப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். அவர் நேரத்தை வழங்கியதும், அவரைச் சந்திப்போம்.” என்று அவர் கூறினார்.

இரண்டு முக்கிய அதிபர் வேட்பாளர்களான கோத்தாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நெருங்கியவர்கள் தமிழ்க்கட்சிகளின் இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ச சார்பாக அதனை நிராகரித்தார். சஜித் பிரேமதாசாவுக்காக பரப்புரை செய்யும் அமைச்சர் கபீர் காசிம் அத்தகைய நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று கூறினார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன், ”முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளை, அதிபர் வேட்பாளர்கள் நிராகரிப்பதால், தமிழ் கட்சிகள் மனம் தளராது.

எந்தவொரு பிரதான வேட்பாளரும் எங்களை மகிழ்விக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து சிங்கள மக்களுக்கு அறிவுறுத்துவதே இதன் நோக்கம்.

ஒரு நோய் இருந்திருந்தால், அதனைக் குணப்படுத்த சரியான மருந்து கொடுக்க வேண்டும். தவறான மருந்தை வழங்குவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியாது.

ஒரு சிறுபான்மைக் குழுவான தமிழ் மக்கள், தங்கள் விவகாரங்களைக் கவனிக்கும் உரிமை இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!