சீன அபிவிருத்தி வங்கியிடம் 1 பில்லியன் டொலர் கடன் வாங்குகிறது சிறிலங்கா

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளது. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கடனைப் பெறவுள்ளது.

எட்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில், இந்தக் கடன் பெறப்படவுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“சிறிலங்காவுக்கு கடன் வழங்க நான்கு அனைத்துலக நிறுவனங்கள் முன்வந்திருந்தன. ஏனைய மூன்று நிறுவனங்களும், கடனை மூன்று ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தன.

ஆனால் சீன அபிவிருத்தி வங்கி, எட்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளித்துள்ளது. இந்தக் கடன், 5.3 வீத வட்டியுடன் மீளச் செலுத்தப்பட வேண்டும்.

இது ஒரு நல்ல வாய்ப்பு. மூன்று ஆண்டு விலக்குக் காலம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு தடவைகள் தலா 100 மில்லியன் ரூபா வீதம் கடனை திருப்பி செலுத்த முடியும். ” என்று நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சிறிலங்கா அடுத்த ஆண்டில் கடுமையான கடன் நெருக்கடியைச் சந்திக்கும் என்றும், 2019இல் 4.3 பில்லியன் ரூபா கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாகவும், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!