என்னை மன்னித்து விடுங்கள் அம்மா…..லாரியில் இறப்பதற்கு முன் தாய்க்கு அனுப்பிய பெண்ணின் இறுதி செய்தி!

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் பல்கேரியா நாட்டின் கண்டெய்னர் லாரி ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு சென்று அந்த கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போலீசார் அதில் 39 பிணங்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிணமாக மீட்கப்பட்டவர்களில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஆவர். அந்த லாரியை ஓட்டிவந்த டிரைவரான 25 மதிக்கத்தக்க வடக்கு அயர்லாந்து நாட்டவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்களாம் என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 3 பெண்கள் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் ட்ரே மை (26) என்ற பெண்ணாக இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் ட்ரே மை கண்டெய்னரில் மூச்சுத்திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் தனது தாயாருக்கு செல்போன் மூலம் செய்தி அனுப்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்னர் தனது தாயாருக்கு அனுப்பிய செய்தியில், ‘என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா… வெளிநாட்டில் குடியேற நான் தேர்ந்தெடுத்த பாதை வெற்றியடையவில்லை. அம்மா நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

நான் செத்துக்கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் என்னால் மூச்சுவிட முடியவில்லை…. நான் வியட்நாமை சேர்ந்தவள்…. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா’ என செய்தி அனுப்பியுள்ளார். கண்டெய்னரில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் அடையாளம் காண தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!