எம்சிசி கொடைக்கு ஒப்புதல் – அமெரிக்கா வரவேற்பு

மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் அனுமதி கிடைக்காமையால், நீண்ட நாட்களாக இந்தக் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாமல் இருந்து வந்தது.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எம்சிசி கொடை உடன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,” இந்த உடன்பாட்டின் கீழ் சிறிலங்கா உத்தேச திட்டங்களின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடும் மற்றும் கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளும்.

காணி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான வரலாற்று ரீதியாக சிறிலங்கா அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கான ஆதரவும் இதில் அடங்கும். இந்த உடன்பாட்டுக்கு சிறிலங்கா அங்கீகாரம் அளித்துள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மீள் பதிவு செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்,

“சிறிலங்கா 480 மில்லியன் டொலர் எம்சிசி கொடைக்கு ஒப்புதல் அளித்தது ஒரு சிறந்த செய்தி.

இந்தக் கொடை, போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் நில முகாமைத்துவ செயல்முறைகளை மேம்படுத்த உதவும்.

அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!