விடுதலைப் புலிகளை மட்டும் வீழ்த்தியிருந்தால் இது நடந்திருக்காது! மகிந்த ராஜபக்ச.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் முஸ்லிம் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஒருவருக்கு நாட்டின் தலைமைத்துவத்தையும் வகிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர், “பேருவளை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கிழக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது, நோன்புக்கு முன்னரே அவர்களை மீள்குடியேற்றுவதாக உறுதியளித்திருந்தேன். அவ்வாறு செய்தேன். முஸ்லிம் சமூகத்துடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் நெருங்கி செயற்பட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

பேருவளை சம்பவம் இடம்பெற்றபோது நாட்டில் நான் இருக்கவில்லை. நாடு திரும்பியவுடன் களுத்துறை – பேருவளை, அளுத்கமவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு அவர்களது பாதுகாப்பினை நினைத்து நட்டஈட்டை வழங்கியே திரும்பினேன். ஆனாலும் எனக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் மக்களைத் தூண்டிவிட்டது. எனினும் அண்மையில் கிங்தோட்டை சம்பவம், அம்பாறை சம்பவம், திகன சம்பவம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் நாங்கள் களத்துக்கு சென்று தேரர்களுடன் பேச்சு நடத்தி தீர்வை கண்டோம். நாட்டில் பாதுகாப்பு இல்லாவிட்டால் முன்நோக்கிச் செல்லமுடியாது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அதிகமாக முஸ்லிம் மக்களே பாதிப்பை எதிர்கொண்டனர்.

வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் பள்ளிகளுக்கு முஸ்லிம்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. 30 வருடப் போர்க்காலத்திலும் இப்படி இருக்கவில்லை. அலவி மௌலானாவின் மகன், கடைக்குச் சென்றபோதும் வர்த்தக நிலையங்கள் கூட திறந்துவைத்திருக்கவில்லை. அரசாங்கத்தின் கவனயீனமே இதற்குக் காரணம், சந்தேக நபர்கள் இவர்கள்தான், மாவனெல்லையில் புத்தர் சிலையை தாக்கினார்கள், பயிற்சி பெற்றார்கள், ஆயுதங்களை சேகரித்தார்கள் என்று தகவல்கள் கிடைத்த போதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமல்போய்விடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் முஸ்லிம் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது. தேசிய பாதுகாப்பை வழங்கமுடியாத நபருக்கு நாட்டின் தலைமைத்துவத்தை வகிக்க முடியாது” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!