கோத்தாபயவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் – பஷில்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவின் வெற்றியை நவம்பர் 17 ஆம் திகதி கொண்டாட நாட்டு மக்கள் அனைவரும் தயாராகுங்கள் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு – கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பினை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டதை தொடர்ந்து சுற்று சூலுக்கும், தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலே இன்று வரை தேர்தல் பிரச்சாரங்களை கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்துள்ளோம்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ எவரையும் விமர்சித்து கருத்துக்களை தெரிவிக்கவில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்திய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தரப்பினருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலையாக செயற்பட்டு சுயாதீனமான தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் சுயாதீனமான முறையில் செயற்பட்டுள்ளமைக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ரீதியிலும் , தனிப்பட்ட ரீதியிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!