20 ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்! – என்கிறார் சம்பிக்க

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கும் என்று அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.“ ஜே.வி.பி. கட்சியினர் முன்வைத்துள்ள 20வது திருத்தச் சட்டமானது நாட்டை தளம்பல் நிலைக்கு இட்டுச் செல்வதுடன், ஜனநாயகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.

இதுபோன்ற சரத்துக்கள் 19ம் திருத்தச் சட்டத்தின் போதும் உள்வாங்கப்பட்டிருந்தன. எனினும் உச்சநீதிமன்றம் தலையிட்டு அதனை நீக்கியிருந்தது.அவ்வாறான சரத்துக்கள் தொடர்ந்தும் உள்வாங்கப்படுவதாயின் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலமாகவே அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ரத்துச் செய்யும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் நிலையான அரசாங்கமொன்றை அமைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே தேர்தல் முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தை ஜாதிக ஹெல உறுமய கட்சி தீவிரமாக எதிர்க்கும் என்றும் அமைச்சர் சம்பிக ரணவக தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!