கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த அனைவரின் ஒத்துழைப்பே காரணம் – அகிலவிராஜ்

கல்வி துறையின் புரட்சிகரமான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சில் பணிபுரியும் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பே காரணமாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ், கல்வி அமைச்சில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்று செல்லும் நிகழ்வு இன்று (21) கல்வி அமைச்சில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அங்கு அமைச்சர் அகிலவிராஜ் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து வருட காலத்தில் நாட்டின் கல்வி துறையில் பாரியளவிலான வேலைகளை முன்னெடுத்தமையை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைக்கின்றேன்.
இவ்வாறு எமது திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சின் பணிபுரியும் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பே காரணமாகும்.

சுரக்ஷா காப்புறுதி திட்டம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டம் உட்பட பல்வேறு புதுமையான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தன்னால் முடிந்தது.
எனவே அடுத்து வரும் கல்வி அமைச்சர் யாராக இருந்தாலும் சிறார்களின் நலனுக்காக ஆரம்பித்த மேற்குறித்த திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும்.

அரசியல் ரீதியான பிரபல்ய தீர்மானங்களை எடுப்பதனை விடுத்து நாட்டின் கல்வியின் முன்னேற்றத்திற்கு முக்கிய பல தீர்மானங்களை என்னால் எடுக்க முடிந்தது. பல வருடங்களாக முன்னெடுக்க முடியாமல் போன ஆசிரியர் இடமாற்றல் கொள்கையை நடைமுறைப்படுத்தல், தேசிய பாடசாலைகளுக்கு திறமைகளுடன் கூடிய இளைஞர்களை அதிபர் சேவைக்கு நியமித்தல் போன்ற பல்வேறு கடினமான தீர்மானங்களை நான் எடுத்தேன்.
இந்த தீர்மானங்களினால் பலர் என்னுடன் அதிருப்தி அடைந்த நிலையில் நாட்டின் எதிர்காலத்திற்காக இவ்வாறான சவால்களை பொறுப்பேற்றேன்.

ஜனாதிபதி மற்றும் மாகாண சபைகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் கல்வி துறையின் அபிவிருத்திக்காக எம்மால் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. எனவே எனக்கு வழங்கிய ஒத்துழைப்பை புதிய கல்வி அமைச்சருக்கு வழங்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!