அரச ஊடகங்களுக்கும் தனியார் ஊடகங்களுக்கும் சமவுரிமையை வழங்கும் புதிய கலாசாரத்தை உருவாக்குவோம் : பந்துல

ஊடக சுதந்திரம் என்பது கடந்த அரசாங்கத்தில் பெயரளவிலேயே காணப்பட்டது. எமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்தை யதார்த்த பூர்வமாக முன்னிறுத்த எதிர்பார்த்துள்ளதுடன், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாது புதிய ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் , உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த நான்கரை வருடங்களில் அரச ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் திருத்திகரமானதமாக இருக்கவில்லை.

அவர்கள் எதிர்கட்சியினருக்கு சேறுபூசும் வகையிலான செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தனர். ஆகவே இனிமேல் அவ்வாறானதொரு நிலைமை காணப்படாது எனவும் அரச ஊடகங்களில் எதிர்கட்சியினர் தொடர்பில் சுதந்திரமான விதத்தில் செய்திகளை வெளியிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர் பந்துல குணவர்தன ஊடக அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் இன்று இடம் பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

இடைக்கால அரசாங்கத்தில் ஊடக அமைச்சராக என்னை நியமித்த மையை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

மிகவும் முக்கியமான தேசியப் பொறுப்பு எமக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரண்டாவது கண்ணாக செயற்படும் முதன்னிலையான ஊடக கலாச்சாரத்திற்கு உரித்துடையவையே ஊடகங்கள்.

ஆகவே ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்பதில் கவனம் செலுத்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவ்விடயத்தை உள்ளடக்கியிருந்தார்.

எமது நாட்டில் ஊடகத்துறையில் தனியார் மற்றும் அரச ஊடகங்கள் என இரண்டு பிரதான பிரிவுகள் காணப்படுகின்றன.

கடந்த நான்கரை வருடங்களில் அரச ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் திருத்திகரமானதமாக இருக்கவில்லை. அந்த விடயம் பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

கடந்த கால ஆட்சியாளர்கள் குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தார் மற்றும் அவர்களுடன் இணைந்தோருக்கு எதிராக சேறுபூசும் விதமாகவே அரச ஊடகங்களை பயன்படுத்தினர்.

இருந்தபோதிலும் தனியார் ஊடகங்களின் உதவியை கொண்டே மக்கள் மத்தியில் புதிய சிந்தனையை உருவாக்கி 69 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியிருக்கின்றார்.

அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு சம உரிமையை கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். ஆகவே அந்த வகையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம். அத்துடன் அரச ஊடகங்களில் எதிர்க்கட்சியினரின் செய்திகளை வெளிப்படுத்துவதற்கான பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கான செயற்படுகளையும் முன்னெடுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளோம்.

ஊடக சுந்திரத்தின் ஊடாக வளமான நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!