சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தல்

சிறிலங்காவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள சுவிஸ் அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

சுவிஸ் தூதரகத்துடன் தொடர்புடைய தகவல்களை வெளிப்படுத்தக் கோரியே, பெண் பணியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் தற்காலிகமாக கடத்தி செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மிக மோசமான – ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் என்று இதனை சுவிஸ் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த சம்பவம் குறித்து சிறிலங்கா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் நடந்த சூழ்நிலைகள் குறித்து உடனடியாக முழுமையான விசாரணையை நடத்தக் கோருகிறது, என, சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பியரே அலய்ன் எல்சிங்கர் தெரிவித்துள்ளார்.

பேர்னில் உள்ள சிறிலங்கா தூதுவர் சுவிஸ் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இந்த விடயம் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!