ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்ட ஈழ வரைபடம்! – ரம்புக்வெல

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விபரிக்கும் இலங்கை விளக்கப் படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழ வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“ கடந்த ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளில் ஒரு நேர்கோடு காணப்பட்டது. அந்தக் கோட்டினை மூடிமறைக்க முடியாது. ஈழ வரைப்படமானது அதில் தெளிவாகத் தெரிகிறது என்பது மூடிமறைக்க முடியாத உண்மை. வரைபடத்தை பார்த்தால் அது புரியும். அதனை மூடிமறைத்துப் பேசினால் நாங்கள் பொய்கூறுவதாகி விடும்.

சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும், அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக இருந்த சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததே பிரதான பிரச்சினையாக இருந்தது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தாம் தமிழ் மக்களிடம் இருந்தும் வாக்குகளை எதிர்பார்த்த போதிலும் அது நிறைவேறவில்லை என்றாலும், தாம் நாட்டின் ஜனாதிபதி என்பதை தனது பதவியேற்பு நிகழ்வில் அநுராதபுரத்தில் வைத்து கூறியிருந்தார்.

இதனிடையே, சிங்களத் தலைவர் ஒருவருக்கே வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததை நான் அவதானித்திருந்தேன்.

எனினும் அந்தப் பேச்சில் ஓர் அர்த்தம் உள்ளது. அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனக் கட்டமைப்பினுள் பெரும்பான்மையின மக்களின் சந்தேகங்களுக்கு உரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே நான் அவதானிக்கின்றேன்.

அதற்கு காரணமும் உள்ளது. சில இனவாத அரசியல் தலைவர்கள் சில சந்தர்ப்பங்களில் சவால்களை விடுத்தனர். அதாவது, முடியுமானால் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்தலை வென்றுகாட்டுமாறு சவால்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த சவால்களை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டதாகவே நான் அறிகிறேன். அந்த பிழையான சிந்தனை கொண்டவர்களை ஓன்றிணைத்து இந்த நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கியர் உள்ளிட்ட அனைவரையும் இணைக்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே அவசியமாகும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!