1 மாதம் கோமாவில் இருந்த தாய் – மகளின் பசி குரல் கேட்டு எழுந்த அதிசயம்!

உலகில் தாய்மைக்கு ஈடாக எதுவும் இல்லை என்பது அனைவரும் உணர்ந்ததே. கரு தரிப்பது முதல் பெற்றெடுப்பது வரை மட்டுமே தாய்மை இல்லை. இமை பொழுதும் நம்மை நீங்காமல் காத்து நிற்பதில் துவங்கி, ஒவ்வொரு கணமும் நம்மை பற்றியே சிந்திக்கும் தாய்மைக்கு என்ன செய்தாலும் அது தூசிக்கும் கீழ் தான். தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உரக்க சொல்லும் வகையில் சம்பவம் ஒன்று அர்ஜென்டீனா நாட்டில் நடந்துள்ளது. கேட்பவர் கண்ணில் கண்ணீர் கசிய வைக்கும் சம்பவமாக உள்ளது இது. 30 நாட்களாக கோமாவில் இருந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு, மீண்டும் கோமாவிற்கு சென்றுள்ள சம்பவம் தான் அது. வடக்கு அர்ஜென்டீனா மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 குழந்தைகளுக்கு தாயான 42 வயது பெண் மரியா லாரா ஃபெர்ரேரா, கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர் ஒருவனால் தாக்கப்பட்டுள்ளார். இதில் தலையில் பலத்த அடி வாங்கிய அவர் சுயநினைவை இழந்தார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு பிறகும் சிகிச்சை சிறிதும் பலனளிக்கவில்லை என கூறிய மருத்துவர்கள், ஃபெர்ரேரா மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும். எனவே அவரது உறுப்புகளை தானம் செய்யும்படி குடும்பத்தினருக்கு பரிந்துரைத்தனர். இதனை கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர் செய்வதறியாது சோகத்தில் மூழ்கினர். எனினும் நம்பிக்கையுடன் ஃபெர்ரேராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க கோரினார் அவரது கணவர் மார்ட்டின் டெல்கடோ. இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு நாள் ஃபெர்ரேராவின் இளைய மகள் (2 வயது) மருத்துவமனைக்கு வந்து பாசத்துடன் அவர் அருகில் சென்றாள்.

பின்னர் வீட்டில் வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்து கொண்டு தனக்கு பசிக்கிறது என கூறி தாய்பால் கேட்டிருக்கிறாள். அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. 30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த ஃபெர்ரேரா, தன் மழலையின் குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்பால் கொடுத்துள்ளார். இதை பார்த்த ஃபெர்ரேராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றனர். தாய்மை உணர்வை பார்த்து மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் மரியா லாரா ஃபெர்ரேரா இன்னும் முழுமையாக சுயஉணர்வை பெறவில்லை

மகளின் குரலை கேட்டதும் அவர் கோமாவிற்கு முன் இருந்ததை போல இயல்பாக எழுந்து தாய்ப்பால் கொடுத்துள்ளதால் விரைவில் ஃபெர்ரேரா குணமடைவார் என நம்புவதாக அவர் கணவர் கூறியுள்ளார். 30 நாட்கள் சுயநினைவு இல்லாத தாய் தன் குழந்தை கேட்டதால் பால் கொடுத்த இந்த நிகழ்வை மெடிக்கல் மிராக்கிள் என்பதா அல்லது தாய்மையின் உச்சம் என்பதா..!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!