சுவிஸ் தூதரக பணியாளரை சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்ல அரசாங்கம் தடை!

கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து கொண்டு செல்வதற்கு சுவிஸ் தூதரகம் அனுமதி கோரியதாகவும், அதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினருடன் இலங்கையிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான அனுமதி கோரப்பட்டது. தூதரக பணியாளரை கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுவிஸ் அதிகாரிகள் முயன்றனர்.

நவம்பர் 25 ம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து குறிப்பிட்ட பெண்ணிடமிருந்தோ அல்லது தூதுவரிடமிருந்தோ உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எதனையும் பெறாத போதிலும் தூதுவர் வழங்கிய குறைந்தளவு தகவல்களை அடிப்படையாகவைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் சிறிதளவு கூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

எங்கள் அரசியல்தலைமைத்துவத்தின் மீது சேற்றைவாரியிறைக்கும்,பொய்களையும் பிழையான தகவல்களையும் தெரிவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையாக இதனை காண்கின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!