யாழ். மாவட்டத்தில் 1874 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக 1874 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 298 பேர் பாதிப்படைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாகத் தாழ்வான பிரதேசங்கள் மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்களே மோசமாகப் பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தினை பொறுத்தவரையில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. அதிலும் வடமராட்சி, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

177 குடும்பங்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் பொது இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் உலர் உணவுகள் வழங்கியும் வருகின்றோம். மழை தொடர்ச்சியாக பொய்யுமாக இருந்தால் பாதிப்புக்கள் இன்னும் அதிகரிக் கலாம். நாம் பாதிப்புக்களை இடர்களை எதிர் கொள்ளத் தயாராக உள்ளோம். அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி எம்முடன் தொடர்பு கொண்டிருந்தார். மக்களை மீட்பது இடர் மீட்பு போன்றவற்றுக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

சில இடங்களில் அவர்கள் மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பிரதேச செயலர் களுக்கும் இடர் ஏற்படும் சூழ்நிலையில் உடனடியாக இராணுவத்தினரின் உதவியைக் கூறுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

மழையின் காரணமாகப் பல இடங்களில் கால்வாய்கள் நீதம்பியுள்ளன இதனால் நுளம்புகளின் பெருக்கம் அதிகமாகக் காணப்படும் எனவே மக்கள் டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும்.

அண்மைய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள வெள்ள நீர் தடுப்பணைகள், கடல்நீர் தடுப்பணைகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. அதிலும் அராலி, அரியாலை, தொண்டமானாறு அணைகள் பாதுகாப்பிற்காகத் திறக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!