சஜித் தோல்விக்கு இனத்துவேச பிரசாரமே காரணம்!

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு தென்னிலங்கை இனத்துவேச பிரசாரமே காரணமாக அமைந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“சஜித்தினுடைய தோல்விக்கு காரணம் நாங்கள் எடுத்த நிலைப்பாடு அல்ல. உண்மையில் சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கையிலே கிளறிவிடப்பட்ட இனத்துவேச பிரச்சாரமே காரணம். அது கூடுதலாக முஸ்லீம்களுக்கு எதிரான இனத்துவேச பிரச்சாரமாகத் தான் இருந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரம் மிகக் குறைந்த அளவிலேதான் செய்யப்பட்டிருக்கிறது.

அதற்கு காரணம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பாரிய அச்சம் இருந்தது. அந்த அச்சத்தைப் பிரயோகித்து இது நடக்கும் அது நடக்கும் 2040 ஆம் ஆண்டிலே இலங்கை ஒரு இஸ்லாமிய குடியரசாக மாறிவிடும் என்றெல்லாம் அவர்கள் பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள்.

அது தான் இந்த பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியான ஒரு சூழ்நிலை வராமல் தடுக்கக் கூடிய பலமான ஒருவரை நாங்கள் நியமிக்க வேண்டுமென்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தென்னிலங்கையிலே அதிகமானோர் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆக நாங்கள் மிக கவனமாகவே இதில் செயற்பட்டிருக்கிறோம். ஆரம்பத்திலேயே எங்களுடைய ஆதரவைத் தெரிவித்து அதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு நாங்கள் இடங்கொடுத்திருக்கவில்லை.

காலம் கழித்து தான் அந்த அறிவித்தல் செய்யப்பட்டது. அறிவித்தல் செய்கிற வேளையிலே பெரும்பாலான வாக்காளர்கள் ஏற்கனவே தாங்கள் எப்படியாக வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள். ஆகையினாலே நாங்கள் எடுத்த நிலைப்பாடு அவருடைய தோல்விக்கு எந்த விதத்திலும் காரணியாக இருந்ததில்லை” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!