சம்பிக்க ரணவக்கவுக்கு விளக்கமறியல்

கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் படி, நேற்று முன்னிரவு சம்பிக்க ரணவக்கவை அவரது இல்லத்தில் கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரை கைது செய்து வெளியே கொண்டு செல்லும் போது, தகவல் அறிந்து வீட்டின் முன்பாக குவிந்த அவரது ஆதரவாளர்களும் ஐதேகவினரும் சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

கொழும்பு குற்றப் பிரிவு தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பிக்க ரணவக்க பின்னர், கொழும்பு நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

அப்போது, இன்று காலை வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவில் சம்பிக்க தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர்கள் ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன, அசோக அபேசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் உள்ளிட்டவர்கள் அங்கு வந்து அவருடன் உரையாடி ஆதரவு தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர், சம்பிக்க ரணவக்கவின் இல்லத்துக்குச் சென்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் சம்பிக்க ரணவக்கவின் வாகனம் மோதியதில் உந்துருளியில் சென்ற இளைஞன் காயமடைந்தார்.

இந்த விபத்து இடம்பெற்ற போது, சம்பிக்க ரணவக்கவே வாகனத்தை செலுத்தினார் என்றும், பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி சாரதியே செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினருக்கு கூறினார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!