“கோத்தாவிடமும் கூறியிருந்தோம்! இப்போது உங்களிடமும் கூறுகிறோம்!” – ஜெய்சங்கர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கவும், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப வழங்கவும் இலங்கை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா், செய்தியாளா்களிடம் கூறியதாவது;

“இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை நேற்று (9ம் தேதி) சந்தித்தார்.

அப்போது, பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சா்களும் பேசினா். இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவா்கள் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

அப்போது வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கர், ‘இலங்கை அதிபா் கோத்தபய ராஜபக்சே டில்லி வந்தபோது அவரிடம், தமிழக மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பித்தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அவரும் அவ்வாறு செய்வதாக தெரிவித்தார். அந்த கோரிக்கையை மீண்டும் உங்களிடம் வைக்கிறோம். மீனவா்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சா் தினேஷ் குணரத்ன, ‘விரைவில் மீனவா்கள் விடுவிக்கப்படுவாா்கள்; அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பகுகளும் திருப்பித்தரப்படும்’ என்று உறுதியளித்துள்ளாா்” என்று, ரவீஷ் குமாா் தெரிவித்தாா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!