உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை

ஹவாய் தீவுகள் மற்றும் தென் கலிபோர்னியா கடற்பகுதிகளில் நடைபெறவுள்ள உலகின் மிகப் பெரிய அனைத்துலக கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை நேற்று அறிவித்துள்ளது.

RIMPAC -2018 எனப்படும், பசுபிக் விளிம்பு ஒத்திகையிலேயே சிறிலங்கா கடற்படை முதல்முறையாகப் பங்கேற்கவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 27ஆம் நாள் ஆரம்பித்து, ஓகஸ்ட் 2ஆம் நாள் முடிவடையும்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில், 47 போர்க்கப்பல்கள், 5 நீர்மூழ்கி கப்பல்கள், 18 தேசிய தரை படைகள், 200இற்கும் அதிகமான விமானங்களுடன், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர் என்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடம் தெரிவித்துள்ளது.

1971ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, RIMPAC கூட்டுப் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இம்முறை நடக்கவுள்ளது 26 ஆவது கூட்டுப் பயிற்சியாகும்.

“ஆற்றல், தகவமைப்பு, பங்காளர்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சியில், சிறிலங்கா, வியட்னாம், இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.

மேலும், அவுஸ்ரேலியா, புரூணை, கனடா, சிலி, கம்போடியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பெரு, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, டொங்கா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.

அதேவேளை, சிறிலங்கா தரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும் போர்க்கப்பல் தொடர்பான எந்த தகவலும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!