கரு தலைமையில் தலைமைத்துவ சபை – ஐதேக இழுபறிக்கு முற்றுப்புள்ளி?

ஐக்கிய தேசியக் கட்சியில் வலுப்பெற்றுள்ள தலைமைத்துவ இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் தலைமைத்துவ சபையொன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும்வரை தலைமைத்துவ சபையின் ஊடாக வழிநடத்தல்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகரும் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினருமான கரு ஜயசூரியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆதரவு அணியினர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஐ.தே.கவின் தலைமைத்துவம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டுமென சஜித் ஆதரவு தரப்பு, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய அழுத்தம் கொடுத்து வருகின்றது. சஜித் தரப்பை சமரசப்படுத்த ரணில் விக்கிரமசிங்க பல முயற்சிகளை எடுத்து தலைமைத்துவ விடயத்தில் சஜித் தரப்பு உறுதியாகவுள்ளது. அத்துடன், சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைத்து பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஐ.தே.முவின் பங்காளிக் கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான பின்புலத்திலேயே தொடர்ந்து ஐ.தே.கவின் தலைமைத்துவம் தொடர்பில் இழுபறி நிலை தொடர்கிறது. இந்நிலையில் நேற்று சஜித் ஆதரவு தரப்புக்கும் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தலைமைத்துவ சபையொன்றை அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. என்றாலும் அது முடிவல்ல. இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, சஜித் பிரேமதாசவுக்கு இடையில் நடைபெறவுள்ள தீர்மானமிக்க சந்திப்பின் பின்னர் தலைமைத்துவ சபை தொடர்பிலான அறிவிப்புகள் வெளிப்படுத்தப்படுமெனவும் அறிய முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!