விலைச் சூத்திரத்தை தொடர்ந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரித்திருக்கும் – மஹிந்த

கடந்த அரசாங்கம் அமுல்படுத்திய எரிபொருள் விலைச் சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்திருந்தால், ஒரு லீட்டர் எரிபொருளின் விலை இப்போது 10 முதல் 15 ரூபாய் வரை அதிகரித்திருக்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – அகுனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பினுள் பேசிய அவர், ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து விலைச் சூத்திரத்தை நீக்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்தமையினால் இதுபோன்ற இக்கட்டான நிலை தவிர்க்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கையில் 20 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யக்கூடிய எரிபொருள் இருப்பு உள்ளது என்றும் மேலும் 35,000 மெட்ரிக் டொன் எரிபொருள் கொண்ட ஒரு கப்பல் இந்த மாத இறுதியில் நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தால் சிங்கப்பூர் அல்லது மலேசியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!