ஹெலிகாப்டர் விபத்தில் உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் மகளுடன் உயிரிழப்பு!

உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் தனது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி தான் இது… கோப் பிரயண்ட் என்ற அந்த இளம் வீரர் விளையாடும் போட்டிகளைக் கண்ட ரசிகர்களும் இதேபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும் என்றால் அது மிகையல்ல… அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் பிறந்த கோப் பிரயண்ட் மிகக் சிறிய வயதிலேயே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது தந்தை ஜோ பிரயண்ட் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்துப் போட்டி வீரர் என்பதால் மகனை ஊக்கப்படுத்தினார். குடும்பத்துடன் இத்தாலியில் குடிபெயர்ந்த ஜோ பிரயண்ட் அங்கு போட்டிகளில் பங்கேற்றதுடன், மகனுக்கும் சிறந்த பயிற்சியை அளித்து வந்தார். ஒவ்வொரு கோடை காலத்திலும் அமெரிக்காவிற்கு வந்த பிரயண்ட் அங்கு பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடினார். பள்ளியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்ற பிரயண்ட் முழுத் திறமையை வெளிப்படுத்தியதுடன், புதிய சாதனைகளைப் படைத்து முத்திரை பதித்தார்.

1996ல் கலிபோர்னியாவில் நடைபெற்ற என்.பி.ஏ. போட்டியில் விளையாடி அதிரடியாக புள்ளிகளைக் குவித்தார் பதினெட்டே வயதான பிரயண்ட். 16 சீசன்களில் விளையாடி 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளைக் குவித்ததே அவரது ஆட்டத்திறனுக்கு சான்றாகும். 2008, 2012 ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதில் பிரயண்ட்டுக்கு பெரும் பங்கு உண்டு. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரயண்ட், அதிக சம்பளம் வாங்கிய வீரர்களில் ஒருவர் என போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது. 2016ல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற போதும் விளம்பர தூதராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், 41 வயதான பிரயண்ட் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கூடைப் பந்துப் போட்டி ஒன்றுக்காக தனது 13வயது மகள் கெயின்னா மற்றும் சிலருடன் ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பிரயண்ட், அவரது மகள் உள்பட 9 பேரும் உயிரிழந்தனர். கோப் பிரயன்ட்டின் மரணச் செய்தி அறிந்து அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர் .அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இது மிகவும் பயங்கரமான செய்தி என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் பிரயண்ட்டின் நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். நியூயார்க்கில் உள்ள மடிசன் ஸ்கொயர் கார்டன் உள்விளையாட்டரங்கின் திரையில் பிரயண்ட் மறைந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. திரளான ரசிகர்கள் அங்கு வந்து தங்கள் மனம் கவர்ந்த வீரனுக்கு அஞ்சலியை செலுத்தினர். என்.பி.ஏ. அணிகளைச் சேர்ந்த வீரர்களும், தங்களுக்கு முன்னோடியாக விளங்கிய பிரயண்ட்டின் மறைவுச் செய்தி கேட்டு அஞ்சலி செலுத்தினர்.மிகச் சிறந்த வீரரான பிரயண்ட்டின் உயிரிழப்பு அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, கூடைப்பந்தை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் இழப்புதான் என்பதில் ஐயமில்லை..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!