குறைநிரப்புப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

கடந்த அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட 130 பில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான குறைநிரப்புப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு கொடுப்பனவு செலுத்தத் தவறியுள்ள பல திட்டங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான செயற்றிட்டங்களின் ஒப்பந்தக்காரர்கள், விநியோகஸ்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் ஆகியோருக்கு கடன் செலுத்தவேண்டி உள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு சுமார் 130 பில்லியன் ரூபா கடன் செலுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கடனை செலுத்துவதற்கு மேலதிகக் கடனைப் பெறவேண்டி உள்ளதாகவும் அதற்கான நாடாளுமன்ற அனுமதியை அடுத்த வாரம் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!