சஜித்துக்கு பச்சைக்கொடி காட்டிய ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பரந்துபட்ட அரசியல் கூட்டணியின் தலைமைப் பதவியை விசேட அதிகாரங்கள் சகிதம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.தே.க. தலைமைப் பதவியில் தானே தொடர்ந்தும் நீடிப்பார் என்றும், மாற்றம் தேவையெனில் தேர்தலின் பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், பொதுத்தேர்தலின் போது வேட்புமனு வழங்கல், தேர்தல் பரப்புரை நடவடிக்கையை வழிநடத்தல் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை சஜித்துக்கு வழங்குவதற்கு ரணில் தயாராக இருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவுக்குச் சார்பான ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் கூடி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தனர்.

பொதுத்தேர்தலை ஐ.தே.க. தலைமையிலான பரந்துபட்ட கூட்டணியிலேயே எதிர்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு நடைபெற வேண்டுமானால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்தனர். ஐ.தே.க. தலைமையில் அமையும் கூட்டணியின் தலைவர் பதவி விசேட அதிகாரங்கள் சகிதம் சஜித்துக்கு வழங்கப்பட வேண்டும். கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பும் ரணிலும் இதற்கு உடன்பட்டுள்ளார் என்று அவரின் ஆதரவு அணி உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கூட்டணியின் தலைமைப் பதவி கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட வேண்டுமென சில உறுப்பினர்கள் வாதிட்டனர். அவ்வாறு நடந்தால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் பற்றி எடுத்துரைத்துள்ளனர். இதன்போது கூட்டணியின் தலைமைப் பதவியை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றார் என்று ரணில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதேவேளை, ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் சந்திக்க வைப்பதற்கான முயற்சியில் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!