ஜனாதிபதி தலைமையில் தேசிய வைபவம்

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 04ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளது.

அதனை முன்னிட்டு பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்க விடுமாறும் பெப்ரவரி 03ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் அரச, தனியார் நிறுவனங்களில் மின் குமிழ்களை ஒளிர விடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் பெப்ரவரி 04ஆம் திகதி காலை 8.30மணிக்கு வரும் சுப வேளையில் நாடளாவிய ரீதியில் மரக் கன்றுகளை நடுமாறும் அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடியை பறக்க விடுங்கள். சுதந்திர தின வைபவத்தில் 250 விசேட பிரமுகர்களும் சுமார் 1,000 பொது மக்களும் கலந்து கொள்ளவுள்ளனர். முப்படை, பொலிஸார், மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக அணிவகுப்பு ஊர்வலமும் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அடங்கலாக சுமார் 2,500 பேர் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.

4,325 படையினர் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றனர். கடற்படையில் 860 பேரும், இலங்கை விமான படையில் 815 பேரும், இலங்கை பொலிஸார் சார்பில் 1382 பேரும், சிவில் படைகளில் 515 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர். தேசிய மாணவர் படையணியில் 315 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!