தமிழர்களைப் புறக்கணிக்கும் அரசு – மனித உரிமை செயற்பாட்டார்கள் விசனம்!

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கை என்று இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அழித்திருந்தது என்பதை கடந்த காலத்தில் உணர்ந்திருந்தும் அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து நேற்று பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை மனித உரிமைகள் செயற்பட்டாளர்கள் ஒன்றுகூடினர் .

இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை இசைத்த பின்னர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுவஸ்திகா அருள்லிங்கம் கூறுகையில்,

“இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் தேசிய கீதம் பாட உரிமையுண்டு. சிங்கள மற்றும் தமிழ் இரண்டுமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருப்பதை அங்கீகரிக்கவேண்டும்.

இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் குறைகள் எந்த வகையிலும் மொழி பிரச்சினைக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.

எவ்வாறாயினும் சிங்கள மொழி பேசாத மக்களை பாகுபாடு காட்டும் அல்லது புறக்கணிக்கும் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அளித்திருந்தது என்பதை கடந்த காலம் உணர்ந்திருந்தோம். இதுபோன்ற ஒரு வரலாறு மீண்டும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!