சுதர்சினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சம்பந்தன் – வாக்களிக்காமல் வெளியேறியது கூட்டமைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு ஆதரவு அளிக்குமாறு இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்ட போதும், கடைசியில் வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை.

நேற்று பிற்பகல் பிரதி சபாநாயகர் தெரிவு அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயை தெரிவு செய்யுமாறும் , சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் என்ற பெருமையை பெறுவதற்கு அவருக்கு இடமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, பிரதி சபாநாயகர் பதவி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார்.

அதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதி குழுக்களின் தலைவர் பதவிகள் ஆளும்கட்சிக்கு உரியவை என்றும், அதனை எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒருவருக்கு வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அரசதரப்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் முன்னிறுத்தப்பட்டிருந்தால் அவரை ஆதரிக்க முடியும் என்றும், ஆனால், அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க அவர்களின் யாரும் முன்வரவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதி சபாநாயகர் பதவியை ஆளும்கட்சியின் பக்கம் வைத்துக் கொள்வதற்கு ஐதேக போட்டியிடுவது தவிர்க்க முடியாதது என்று அவர் வாதிட்டார்.

இதனால் சம்பந்தனும், ரணிலும் வாக்குவாதம் செய்தனர். கடைசியில் போட்டி உறுதியானதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பு ஆரம்பித்ததும், இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேறினர்.

அவர்களை அடுத்து, ஜேவிபி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!