ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் வெள்ளவத்தையில் உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வீட்டிலிருந்தே கைப்பற்றப்பட்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக குற்றத்தடுப்பு பிரிவினர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதொச கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர். கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் பதியுதீனின் மனைவியின் இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில் இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு, அந்த வீட்டிலிருந்த இம்ரான் மொஹமட் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

குறித்த நபரும் பல்வேறு நிதிமோசடியில் சிக்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்கிஸை நீதிமன்றத்தில் நேற்று சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர். குறித்த இல்லத்திலிருந்து 09 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான பொருத்தனை பத்திரங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தனர். அதேபோல, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமும் இதுகுறித்த மேலதிக விசாரணைக்காக வாக்குமூலம் பதிவுசெய்யவிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபரான இம்ரான் மொஹமட்டை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!