கத்தியைக் காட்டி மாணவர்களிடம் துவிச்சக்கர வண்டிகள் கொள்ளை

கிளிநொச்சியில் இரண்டு மாணவர்களிடம் கத்தியை காட்டி துவிச்சக்கர வண்டிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. ஒரே பாணியில் இக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர.

கடந்தவாரம் கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில் இருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும், கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்துக்கும் சென்ற மாணவர்களிடமே துவிச் சக்கர வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

காலையில், பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களிடம் தன்னை அவசரமாக ஏற்றிச் செல்லுமாறு கனகபுரம் டிப்போ வீதியில் நடந்து சென்று இளைஞர் ஒருவர் கோரியுள்ளார்.

குறித்த மாணவன், இளைஞனை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது இடையில் தான் ஒடுவதாக தெரிவித்த இளைஞன், மாணவனிடமிருந்து துவிச்சக்கர வண்டியை பெற்று ஓட்டியுள்ளார்.

கனகபுரம் பாடசாலையின் பின் வீதியில் வைத்து மாணவனின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்திய இளைஞன், சத்தமிட்டால் வெட்டிவிடுவேன் இறங்கி ஒடிவிடு எனக்கூறி, துவிச்சக்கர வண்டியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இதேவேளை, இந்துக் கல்லூரிக்குச் சென்று கொண்டிந்த மாணவனிடம் தனது முச்சக்கர வண்டி கடையில் திருத்த விட்டுள்ளதாகவும், அதுவரை கொண்டு சென்று விடுமாறு இளைஞன் ஒருவர் கோரியுள்ளார்.

மாணவன், இளைஞனை ஏற்றுவதற்காக இறங்கிய போது சடுதியாக கத்தியை எடுத்து காட்டிய இளைஞன், மாணவனை அச்சுறுத்தி விட்டு துவிச்சக்கர வண்டியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்திலிருந்து பல கிலோமீற்றர்கள் அப்பால் உள்ள பாடசாலைக்கு வரும் வறிய மாணவர்களாவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!