கொரோனாவின் சவாலை முறியடிப்பதற்கு தயாராக இருக்கிறோம் – மத்திய அரசு!

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கி உள்ளது. எனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய ரசாயன மந்திரி சதானந்த கவுடா கூறியிருக்கிறார். அகமதாபாத்தில் மருத்துவ துறை சர்வதேச கண்காட்சி நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்குதல் நிலைமையை கண்காணிக்க மந்திரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் இதுபற்றி கண்காணித்து வருகிறார்கள்.

நோய் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தடுப்பு மருந்துகள், உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்களும் அவற்றை தொடர்ந்து தயாரித்து வருகின்றன. எனவே 3 மாதங்களுக்கு எந்த தட்டுப்பாடும் வராது. அதேபோல மற்ற நோய்களுக்கான மருந்துகளும் போதுமான அளவுக்கு இருப்பு இருக்கின்றன.

கொரோனா நோய் தாக்குதல் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம். அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ. அனைத்தையும் முழுமையாக செய்திருக்கிறோம். இந்த வி‌ஷயம் நமக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் ஆகும். ஆனாலும் சவாலை முறியடிப்பதற்கு எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!