கீத் நொயார் கடத்தல் – விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் மகிந்த

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து நேற்று கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, “இந்த வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் கோரியிருந்தனர்.

ஆனால் வாக்குமூலம் அளிப்பதற்கான நேரத்தை இன்னமும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை.

எனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. என்னைத் தொடர்ந்து தொந்தரவுக்கு உட்படுத்தி வருகிறது.

கீத் நொயார் கடத்தல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரிக்க வரவுள்ளனர் என்பதை அறிவேன்.

எந்த நேரத்திலும் விசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!