கொரோனா வைரஸ் தாக்கம்: சுகாதார அமைச்சு விடுக்கும் மகிழ்ச்சி அறிவிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நோயாளியும் இலங்கையில் புதிதாகக் கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், கடந்த ஜனவரி மாதம் குணப்படுத்தப்பட்ட சீனப் பெண் உள்ளிட்ட மூவர் இதுவரை குணப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், 99 பேர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 88 பேர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையிலும், ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும், 10 பேர் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த 102 பேரில், கொழும்பு மாவட்டத்தில் 22 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 14 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 9 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 34 பேரும், வெளிநாட்டவர்கள் மூவரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொரோனா தொற்று சந்தேகத்தில் 21 வைத்தியசாலைகளில் 255 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 41 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டோரே அதிக அளவு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த வயதுப் பிரிவினரில் 33 வீதமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 17 வீதமானோரும், 31 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 17 வீதமானோரும், 51 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட 16 வீதமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்ஆண்களில் 68 வீதமானோரும் பெண்களில் 32 வீதமானோரும் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்த மேலும் 223 பேர் இன்று தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

குறித்த நபர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது கட்டமாக இவர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கந்தகாடு, தியத்தலாவை, மீயங்குளம் மற்றும் புனானை ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த நிலையில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த முதலாவது குழுவினர், நேற்று முன்தினம் வெளியேறியிருந்தனர்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்த 311 பேர், இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 203 பேரும், கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 108 பேரும் , இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!