மஹிந்த காலத்தில் மௌனமாக இருந்தவர்கள் இப்போது ஊடக சுதந்திரத்துக்காக குரல் எழுப்புவது மகிழ்ச்சி! – மங்கள

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊடகங்களுக்கு எதிரான செயற்பாடுகளின் போது மௌனித்திருந்தவர்கள் தற்போது ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது என நிதி, ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர,பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரீ.என்.எல். தனியார் தொலைக்காட்சியின் பொல்கஹவலை நிறுவனத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று கூட்டு எதிரணி எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தமக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர,

கடந்த ஆட்சிக் காலத்தில் சிரச, சியத, உதயன், ஈ நியூஸ், லங்கா புவத் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக செயற்பட்டு, ஊடக நிறுவனங்களுக்கு தீ வைத்து ஊடகவியலாளர்களைப் படுகொலைசெய்த போது மௌனித்திருந்தவர்கள் இப்போது ரீ.என்.எல். நிறுவனத் தடைக்கு எதிராக குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

ரீ.என்.எல். நிறுவனத்தின் மீதான தடை நிர்வாக சிக்கல் சார்ந்த ஒன்று. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவரான ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

ஊடகச் சுதந்திரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்பப்ணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுகின்றன. எதிரணியினருக்கே பெருமளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக சிரச போன்ற ஊடகங்கள் பிரதமருக்கு எதிராக நேரடியாகவே செயற்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறிருந்தும் அரசாங்கம் அவற்றுக்குத் தடை ஏற்படுத்துவதில்லை. ரீ.என்.எல். நிறுவனம் 2017 – 2018 ற்கான தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!