புத்தாண்டுக்குப் பின்னரே குடாநாட்டில் ஊரடங்கு தளரும்?

தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும், புத்தாண்டுக்குப் பின்னரும், குடாநாட்டின் சில பகுதிகளில் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது நீடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரும், அதிகாரிகளும் கருத்துக்களை வெளியிட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர் ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் ஆராயப்பட்டன.

தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கைத் தளர்த்த வேண்டாம் என்று சுகாதாரப் பகுதியினரும், பாதுகாப்புத் தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

புத்தாண்டின் பின்னரும் ஊரடங்கு தளர்த்தப்படும்போது ஒவ்வொரு பொலிஸ் பிரிவாக ஊரடங்கைத் தளர்த்தலாம் என்றும், 4 மணி நேரம் ஊரடங்கை நீக்கலாம் என்ற யோசனையும் பாதுகாப்புத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. 4 மணி நேரம் ஊரடங்கு நீக்கம் என்ற விடயம் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி கிழக்கு, தென்மராட்சி, தீவகம் ஆகியவற்றில் மாத்திரம் புத்தாண்டின் பின்னர் ஊரடங்கைத் தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஒருமித்து இணக்கம் தெரிவித்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அந்தப் பிரதேசத்துக்குள் மாத்திரமே நடமாட அனுமதி வழங்கப்படும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

தாவடி, அரியாலை, மானிப்பாயில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமையைப் பொறுத்தே குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துவது தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று மன்னார் தாராபுரத்தின் நிலைமையைப் பொறுத்தே அங்கு ஊரடங்கை நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், பாண்டியன்குளம், ஒட்டுசுட்டானின் ஒரு பகுதி, வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் புத்தாண்டுடன் ஊரடங்கை தளர்த்த முடியும் என்றும் இதன்போது கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!