மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் கொண்டுசெல்லத் தடை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இந்தத் தடை நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலாகியுள்ள நிலையில் மட்டக்களப்பில் அரிசி ஆலைகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்கத்தினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, அரிசித் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அரசாங்க அதிபர், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கே அரிசி விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மாவட்டத்தின் எந்த இடத்திலிருந்தும் வியாபாரிகள் அரிசியினைக் கொள்வனவு செய்யமுடியும் எனவும் அதற்கான வசதிகள் செய்துதரப்படும் என்பதுடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் இலாப நோக்கமற்று மக்களுக்குச் சேவை வழங்க முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விசேட கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜயசேன, இராணுவத்தின் 231ஆவது படைப்பரிவின் கட்டளை அதிகாரி கேனல் ஜனக பல்லேகும்புர, நுகர்வோர் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியும் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளருமான ஆர்.எப்.அன்வர் சதாத் மற்றும் மாவட்டத்தின் அரிசி ஆலை உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!