கொரோனாவை கட்டுப்படுத்திய டென்மார்க்: சாத்தியமானது எப்படி?..

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை மிகக் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் டென்மார்க் நாடு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தி, பெரிய பாதிப்புகளைத் தவிர்த்துள்ளது. இந்த நிலையில் டென்மார்க அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டென்மார்க் வாழ் தமிழர் சுமேசு குமார் என்பவர் தனியார் செய்தி ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார். அதில், கொரோனா தொற்று சீனாவுக்கு அடுத்ததாக பரவ ஆரம்பித்தது ஐரோப்பிய நாடான இத்தாலியில். கடந்த பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் இத்தாலியில் பரவ ஆரம்பித்து, ஒரு சில வாரங்களில் அங்கு ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டுவிட்டு மெல்ல மெல்ல எஞ்சிய ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

அந்த வகையில் டென்மார்க் நாட்டில் முதல் கொரோனா தொற்று, இத்தாலிக்கு பனிச்சறுக்கு சென்று விட்டு திரும்பிய ஒருவரால் கடந்த பிப்ரவரி 27-ம் திகதி உறுதியானது. அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 5.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட டென்மார்க் பல்வேறு நடவடிக்கைகளையும், மருத்துவ முன்னேற்பாடுகளையும் விரிவாக திட்டமிட்டு சரியாக மார்ச் 12 ஆம் திகதி நாடெங்கும் ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கு என்று வெறுமனே அறிவித்து மக்களை பீதியாக்காமல், எவையெவை இயங்கும் எவையெவை இயங்காது, நிறுவனங்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு, வணிகங்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு, குடிமக்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு என்று விலாவாரியாக விவரித்தது டென்மார்க் அரசாங்கம்.

அதே சமயம் இந்த நெருக்கடியால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிடாமல் இருக்க அரசாங்கம் நிதி உதவி வழங்கும் என்று அறிவித்தது. அதன்படி ஒரு நிறுவனம் போதிய உற்பத்தி இல்லாமல் வருமான இழப்பு ஏற்படுவதால், ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சூழல் வந்தால் அவர்களின் சம்பளத்தில் 75% நிதி உதவி அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு தருவதாக அறிவித்தது. இதனால் நிறுவனங்களுக்கு பெரிய நிதி சுமை குறையும், நாட்டில் திடீர் வேலை வாய்ப்பு திண்டாட்டம் தவிர்க்கப்படும், ஊழியர்கள் மூன்று மாதம் விடுப்பு போல வீட்டில் இருப்பதால் கொரோனா தொற்று பரவுதல் குறையும் என பல்வேறு சிக்கலைகளை சமாளிக்க முடியும் என்று டென்மார்க் அரசாங்கம் திறன்பட திட்டமிட்டு செயல்படுத்தியது.

மட்டுமின்றி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்று பிரதமர் மட்டுமல்லாது முக்கிய அமைச்சர்களும் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் தங்கள் திட்டங்களையும், தினசரி நிலவரங்களையும் அறிவித்துக்கொண்டே இருந்தனர். இதுவரை கிட்டத்தட்ட 8 500 பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அதில் சுமார் 420 பேர்தான் மரணித்து உள்ளனர். அவர்களில் 95% சதவீதத்திற்கும் மேல் 65 வயதை கடந்தவர்கள், அவர்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய வியாதிகளால் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்த நோயாளிகளே ஆவர். தாங்கள் எதிர்பார்த்த ஜூன் மாதத்தை விட முன்னரே தொற்று பரவுதல் கட்டுப்பாட்டுடன் இருப்பதை புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரிந்து கொண்ட டென்மார்க் அரசாங்கம், உடனடியாக ஊரடங்கின் முதல் நிலையை கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி தளர்த்தி அறிவித்தது. இதன்படி ஆரம்ப பாடசாலைகள் மற்றும் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவைகளை திறக்க உத்தரவிட்டது.

இதன்மூலம் குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதன் வாயிலாக, அவர்களின் பெற்றோர்கள் தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல தயாராக இருக்க ஆயுத்தமாகும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள், கல்லூரிகளை திறக்க டென்மார்க் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!