தவறான மொழிபெயர்ப்பு என்கிறார் சுமந்திரன்!

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியதாக வெளியான செய்தி, தவறான மொழிப்பெயர்ப்பால் பரப்பப்பட்டுள்ள தவறான செய்தி என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வழங்கிய செவ்வியில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் என வெளியான தகவல்களை அடுத்து, அவருக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி காணொலிப் பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சிங்கள ஊடகத்தின் கேள்விகளுக்கு தாம் வழங்கிய பதிலில் தெளிவான விடயங்களையே குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால் அது அரச சார்பு ஊடகம் ஒன்றினால் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டதாகவும், சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆயுத நடவடிக்கைக்கு நீங்கள் ஆதரவளிக்கவில்லையா? என்று சிங்கள ஊடகவியலாளர் கேட்டதாகவும், அதற்கு தாம் வன்முறைக்கோ, ஆயுத நடவடிக்கைக்கைக்கோ ஆதரவில்லை என்று பதிலளித்ததாகவும், சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையே தமிழ் ஊடகங்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்கு தாம் ஆதரவில்லை என்ற கூறியதான கருத்துப்பட மொழிப்பெயர்ப்பை செய்து செய்திகளை வெளியிட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பு ஊடகம் ஒன்றே முதலில் இந்த தவறான மொழிபெயர்ப்பை வெளியிட்டதாகவும், அதன் சரியான மொழிபெயர்ப்பை உறுதி செய்து கொள்ளாமலேயே, மாவை சேனாதிராசா உள்ளிட்ட தமது கட்சியினர் மற்றும் ஏனையவர்கள் தம் மீது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு விடயத்திற்காகவும் தன்னைத் தொடர்பு கொள்கின்ற தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுவதற்கு முன்னர் தன்னைத் தொடர்பு கொண்டு இதுபற்றிக் கேட்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தனக்கு ஆயுதத்திலேயோ வன்முறையிலோ நம்பிக்கை கிடையாது என்றும், அதில் எவ்விதமான மாற்று கருத்தும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் உடன்பாடு இல்லை என்றும் இந்த காணொலியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!