வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்: கைபேசியை ஆராய்ந்தபோது அதிர்ச்சியடைந்த வனத்துறையினர்!

தமிழகத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் செல்போனை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டி, சுசீந்திரம், தேரூர், மணக்குடி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சிலர் பறவைகளை வேட்டையாடுவதாகவும், அச்சங்குளத்தில் சிலர் வலைவிரித்து மீன்பிடிப்பதாகவும் வனத்துறைக்கு புகார்கள் வந்தன. பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனவர் பிரசன்னா தலைமையில் வனக்காப்பாளர்கள் பிரபாகர், கிருஷ்ணமூர்த்தி, வேட்டை தடுப்பு காவலர்கள் ஜெகன், பிரவீன், ராஜன், இந்திரன் ஆகியோர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு அச்சங்குளத்தில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (26), மாணிக்கராஜ் (38) ஆகிய இருவரையும் பிடித்து ஆரல்வாய்மொழியில் உள்ள பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிவகுமாரின் செல்போனை வாங்கி வனத்துறை பொலிசார் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.

அதாவது, ஆமை, மலைபாம்பு, உடும்பு உள்ளிட்டவற்றை சமைத்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதனால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ந்த வனத்துறையினர், சிவகுமாரிடம் துருவி துருவி விசாரித்தனர். முதலில் மழுப்பலாக பதில் அளித்த சிவகுமார், வனத்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

அதாவது, பொற்றையடி மருந்துவாழ்மலையில் தன்னுடைய நண்பர் தினேஷ் (24) என்பவருடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதுடன், அதனை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டோம் என்று கூறினார். இதையடுத்து பொலிசார் தினேசையும் பிடித்தனர். வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக சிவகுமார், தினேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!