இராணுவ ஆட்சி,பௌத்த மயமாக்கலை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி! – சம்பந்தன் காட்டம்

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும்,பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடவிருப்பதாகவும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

“பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார்.

அதிலும் பௌத்த மதம் சார்ந்த பிக்குகள்,படை அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 சிங்களவர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ இல்லாமல் இந்தச் செயலணியை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உருவாக்கியுள்ளார்.

இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபயவின் இந்த சர்வாதிகார ஆட்சி முறைக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் காட்டமான அறிக்கையை வெளியிடவுள்ளது” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!