ஒருபுறம் கொரோனா… ஒருபுறம் நாய்கறி திருவிழா: சீனாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சீனாவில் கொரோனா பரவல் ஆபத்து ஒருபுறமிருக்க, யூலின் நகரில் ஆண்டுதோறும் களைகட்டும் நாய்கறி திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக துவங்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலின் நகரில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நாய்கறி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழாவிற்கு விலங்குகள் நல ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த முறை வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருக்கும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, இந்த விழா இந்த ஆண்டே கடைசியாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வனவிலங்கு வர்த்தகத்தை தடை செய்வதற்கும் செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தற்போது புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாய்கறி சாப்பிடுவதை தடை செய்த சீனாவின் முதல் நகரம் ஷென்சென் ஆகும்.

மேலும் பல நகரங்கள் இதே நிலையை பின்தொடரும் என்று விலங்கு நல ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி நாய்களை செல்லப்பிராணிகள் எனவும் இனி அவை பண்ணை விலங்கல்ல என வகைப்படுத்த விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூலின் நகரில் சுமார் 10 நாட்கள் இந்த நாய்கறி திருவிழா படு பயங்கரமாக நடைபெறும். இந்த திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும்.

விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். சீனாவில் கோடைகாலங்களில் நாய் கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது சீனர்கள் நம்புகின்றனர். அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை, பூனைகளை பலியிடுதலும் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!