அமெரிக்காவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் பலி!

அமெரிகாவின் இடஹோ மாகாணம் ஸ்கூட்னை நகரில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி பகுதியில் தண்ணீர் மற்றும் நிலம் என இரண்டிலும் தரையிரங்கும் வடிவமைப்பை கொண்ட சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் பயணங்களை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், அந்த ஏரி பகுதியின் வான் பரப்பில் நேற்று பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் சுமார் 900 அடி உயரத்தில் நடு வானில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதியதையடுத்து அவை ஏரிக்குள் விழுந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த அனைவரும் (மொத்தம் 8 பேர்) உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேரின் உடலை மட்டுமே மீட்புப்படையினரால் கண்டுபிடிக்க முடிந்தது.

ஏரியில் மூழ்கிய எஞ்சியவர்களின் உடலை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!