இராணுவத் தளபதி பேருந்தில் வந்தால் ‘சோதனை’ புரியும்!

இராணுவ தளபதி சவேந்திர சில்வா பேருந்தில் வடக்கிற்கு வந்தால் இராணுவத்தினரின் கெடுபிடியை நேரடியாகப் பார்க்கலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினரால் இடையூறு இல்லை என்றும் சுமூகமான நிலையே உள்ளதாகவும் அரசியல்வாதிகளே பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ இராணுவத் தளபதியாக இருக்கின்ற சவேந்திர சில்வா வடக்கில் இராணுவத்தினரால் வடக்கில் இடையூறு இல்லை என்று கூறுகின்றார். மாங்குளத்தில் இருந்து வவுனியா வரையிலும் 5 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இராணுவ உடை இல்லாமல் மக்களோடு மக்களாக இ.போ.ச. பேருந்தில் வடக்கிற்கு வரவேண்டும். அப்போதுதான் இராணுவத்தால் மக்கள் எவ்வளவு வஞ்சிக்கப்படுகின்றனர் என்று அவருக்குத் தெரியும்.

தேர்தலுக்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனினும் எனது வாகனத்தை விசுவமடு ரெட்பானாவில் மறித்து வைத்திருந்தனர். அங்கு முன்னாள் இராணுவ அதிகாரி வேட்பாளராக போட்டியிடுவதால் தான், அவ்வாறு நடைபெற்றது.

அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இந்த தேர்தலை அவர்கள் கையாளப் போகின்றனர். இந்த சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!