கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – மஹிந்தவின் பங்காளிகள் கொந்தளிப்பு!

நாட்டின் அரசமைப்புக்கு முரணாகத் தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று, மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டியூ குணசேகர ஆகியோர் கூட்டாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்

“வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் கூட்டமைப்பு கேட்கும் தன்னாட்சி தீர்வு தனிநாட்டையும் – தனி அரசையும் பறைசாற்றுகின்றது.

தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள், அவர்கள் தேசிய இனத்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதற்காக அவர்கள் தனியாக நின்று உரிமைகளைக் கேட்க முடியாது; தீர்வைக் கேட்க முடியாது.

இலங்கையிலுள்ள மூவினத்தவர்களுக்கும் நாடு ஒன்று; அரசு ஒன்று; அரசமைப்பு ஒன்று. எனவே, மூவினத்தவர்களுக்கும் ஒரே விதமான உரிமைகளையும், ஒரே தீர்வையும்தான் வழங்க முடியும்.

தமிழர்கள் தனித்துவமான இனம் என்று அவர்களுக்குத் தனியாக எதையும் வழங்க முடியாது. அவர்கள் கோரும் உரிமைகளும், தீர்வும் தனித்தமிழீழத்தையே பிரகடனப்படுத்துகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்குச் சொந்தமான மாகாணங்கள் அல்ல. அதில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இதை உணர்ந்து கூட்டமைப்பினர் செயற்பட வேண்டும்.

நாட்டின் அரசமைப்புக்கு முரணான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது அதைத் தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்” என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!