நாட்டுக்கு ஆபத்தான மூவர்! -பீரிஸ் கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகிய மூவரும் நாட்டுக்கு ஆபத்தானவர்கள். இவர்களின் கோரிக்கைகள் எதனையும் ராஜபக்ச அரசு நிறைவேற்றவே மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பயங்கரவாதிகளின் தனிநாட்டுக் கோரிக்கையுடன் வலம் வரும் சம்பந்தனை எப்படி நாம் நம்புவது? அதேபோல் அடிப்படைவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் ரிஷாத் பதியுதீனையும், ரவூப் ஹக்கீமையும் எப்படி நாம் நம்புவது? இவர்கள் மூவருமே மன்னிக்க முடியாதவர்கள்.

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான இவர்கள், அம்மக்களின் நலன் சார்ந்து செயற்படவில்லை. தங்கள் சுயலாபம் கருதியே அரசியல் நடத்துகின்றார்கள்.

இவர்கள் மூவரும்தான் கடந்த நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்தவர்கள். ஆனால், இவர்களை நம்பி நாடாளுமன்றம் அனுப்பிய மக்கள் எந்தப் பயனையும் பெறவில்லை.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பிணைமுறி மோசடிக்காரர்களைக் காப்பாற்றிய இம்மூவரும் இன்று எமது அரசை வெட்கமில்லாமல் விமர்சிக்கின்றார்கள்.

இவர்கள் மூவரும் நாட்டு ஆபத்தானவர்கள். இவர்களின் கோரிக்கைகள் எதனையும் ராஜபக்ச அரசு நிறைவேற்றவேமாட்டாது.

பொதுத்தேர்தலில் பின்னர் ஹக்கீம், ரிஷாத் ஆகியோரை அரசில் இணைக்கவேமாட்டோம். மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மிகவும் பலமிக்க ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிறுவியே தீரும்.

தமிழ், முஸ்லிம் மக்களுடன் நாம் நேரில் பேசி அவர்களின் குறைகளைத் தீர்த்து வைப்போம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!