அமெரிக்காவில் நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்: 4 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம்!

சின்சினாட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கும், 2.15 மணிக்கும் அடுத்தடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் நகரின் வேறு 2 இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்.

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 4 பேர் பலியாயினர். 18 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒவ்வொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கும் இடையே 60 முதல் 90 நிமிடம் இடைவெளி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து சின்சினாட்டி நகரின் போலீஸ் தலைமை அதிகாரி பவுல் நெடிகாட் கூறுகையில் “வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு மிகவும் கொடூரமானது. இதில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரம் இப்போது வரை தெரியவில்லை.

இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள்” என்றார். இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!