இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்க முடியாது!

இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார்.

“இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. இவ்விரு இனங்களின் உரிமைகள் சமமானது. அரசியல் அமைப்பு ரீதியில் இந்த உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இந்த ஆட்சியில் உள்ள தமிழ் தலைமைகள் தமது தேர்தல் கொள்கையில் தமிழர் தேசம் தலைநிமிர என பிரசாரம் செய்துள்ளனர். அப்படியென்றால் தமிழர் தேசம் பலமடைய வேண்டும் என்ற ஏகமனதான நிலைப்பாடு வடக்கு கிழக்கு மக்களால் விரும்பப்பட்டுள்ளது.

அந்த ஏகமனதான தீர்மானம் நிராகரிக்கப்பட முடியாது. தமிழ் மக்களுக்கு இந்த உரிமைகளை தடைகளின்றி வழங்கப்பட வேண்டும். அதேபோல் ஜனாதிபதி இறையாண்மை குறித்தும் பேசியுள்ளார். இந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். அது சரியானதே, ஆனால் அந்த இறையாண்மை நிச்சயமாக சமரசத்திற்கு உற்படுத்தப்பட வேண்டும்.

இந்நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. இந்த யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக ஒட்டுமொத்த உலகமுமே கூறுகின்றது. சர்வதேச மட்டத்திை உள்ளடக்கிய பிரதான விடயங்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டது. போற்குற்றத்தில் இன்றைய பிரதான கட்சி மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. எனவே இறையாண்மையை முதன்மைப்படுத்தி இந்த விடயங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவே முடியாது. மிக மோசமான போர் குற்றங்களை எக்காரணம் கொண்டும் மறைக்க முடியாது.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் பல நல்ல விடயங்கள் உள்ளது, வேறுநாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தடுக்கப்படுவது, காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறும் விடயங்கள் அனைத்துமே முக்கியமானதான விடயமாகும்.

அதேபோல் வடக்கு கிழக்கு பூமி கடந்த முப்பது ஆண்டுகள் யுத்தத்திற்கு முகங்கொடுதுள்ளது என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது. இந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் முப்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளனர். அவர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களை நிராகரிக்க முடியாது. அவர்களின் பொருளாதாரத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர இந்நாட்டில் எந்தவித போர் குற்றங்களும் இடம்பெறவில்லை. கஜேந்திரகுமார் இந்தச் சபையை தவறாக வழிநடத்துகின்றார். பொய்களை கூறி ஏமாற்றுகின்றார் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!