சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அரசியலை தோற்கடிக்க வேண்டும் – காெக்கரிக்கிறார் விமல்

தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹோமாகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

“திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன. அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது.

ஆனால், விக்னேஸ்வரனுக்கு அதற்கான தகுதி கிடையாது. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில். றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர். இப்போது தமிழர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான ஒரு நாடகத்தைத்தான் அவர் அரங்கேற்றி வருகிறார்.

இதன் ஓர் அங்கமாகத்தான், நாடாளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என கருத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றாகத் தெரியும், அப்படி கூறினால் இனவாதத்தை இலகுவாகத் தூண்டிவிட முடியும் என்று. எம்மைப் பொறுத்தவரை யாழில் இருந்து வந்த சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கும் கிழக்கிலிருந்து வந்த அதாவுல்லா போன்றோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை வழங்க வேண்டும்.

இதுதான் எமது நிலைப்பாடாகும். இதுதான் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வழிமுறைகளாகும். நாம் இவ்வாறான செற்பாடுகளை மேற்கொள்ளும்போதுதான் அனைத்து சமூகங்களும் முன்னேற்றமடையும். அப்போது மட்டும்தான், சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனின் இனவாத அரசியலுக்கும் தேவை ஏற்படாது போகும். இன்னும் சில நாட்களில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக இந்த நாடு மேலும் பலமடையும்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!