தமிழ் மக்கள் விளைவுகளை எதிகொள்ள நேரிடும். நாடாளுமன்றில் தமிழ் பிரதிநிதிகளை எச்சரித்த சரத்பொன்சேகா!

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தடாலடி பதில் வழங்கியுள்ளார்.

இதேவேளை இனவாதியாக இருப்பவர்களிடம் இருந்தே கடுமையான வார்த்தைகள் வெளிவருகிறது எனவும் இன்று நாடாளுமன்றில் பதிலளித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன்.

அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன்.

இவர் இராணுவத் தளபதியாக செயற்பட்ட காலங்களில் இலங்கை சிங்கள மரம் என்றும் ஏனையவர்கள் அனைவரும் அந்த சிங்கள மரத்தின் மீதான கொடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கடுமையான வார்த்தைகள், பொதுவுடைமையாளராக இல்லாத அல்லது இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே வெளிவருகிறது.

ஒருவேளை அவர் தனது பதவியை இழந்த பின்னர் அல்லது சிறையில் இருந்த பின்னர் மாறியிருக்கலாம்.

வடக்கு கிழக்கு பகுதிகள் யுத்தத்தினை எதிர்கொண்ட, பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகள்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாகவும் ஜெனரல் பொன்சேகாவாகவும் இருந்த அக்காலப்பகுதியில், வடக்கு கிழக்கு முழு பொருளாதார தடையின் கீழ் இருந்தது.

அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஆயிரத்து 500 ரூபாவாக இருந்தது. வடக்கு கிழக்குப் பகுதிகள் எதிர்கொண்ட நிலை இதுவே.

32 வருடங்கள் முழுமையான அழிவுக்குப் பின் அந்தப் பகுதிகளை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றதென பதில் வழங்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!