கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது

கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் இருந்தபோது, வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதாகவும், அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில், வீடியோகான் குழுமம் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடரப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், தீபக் கோச்சார் நேற்று (செப்.,7) கைது செய்யப்பட்டார். இதுதொடா்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தீபக் கோச்சாரை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக கிடைத்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டார். எனவே அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் இன்று (செப்.,8) ஆஜர்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ எனக் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!