குட்டிமணிக்கு வழங்கப்படாத வாய்ப்பு பிரேமலாலுக்கு எவ்வாறு கிடைத்தது – சஜித் கேள்வி!

“மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டிமணிக்கு எம்.பியாக பதவியேற்க அரசியலமைப்புக்கமைய இடமளிக்கப்படவில்லை. ஆனால், அதேபோன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவுக்கு எம்.பியாக பதவியேற்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) நாடாளுமன்ற சபையில் கேள்வி எழுப்பினார். மேலும்,

“1982ம் ஆண்டில் ரெலோ அமைப்பின் தலைவரான குட்டிமணி என்ற செல்வராஜா யோகச்சந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராகக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அப்போதைய சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசமைப்பின் 89 மற்றும் 91ம் உறுப்புரைகளை காட்டி அவரின் எம்.பி. பதவி நிராகரிக்கப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையிலேயே அவரின் பதவி நிராகரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த பிரேமலால் ஜயசேகர எம்.பியாகியுள்ளார். அப்படியாயின் தற்போதைய சபாநாயகர் அரசமைப்பை மீறி நடந்துகொண்டுள்ளார் என்றே அர்த்தப்படும்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!